×

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீ: புகைமூட்டத்தால் கிராம மக்கள் அவதி

நெல்லை: நெல்லை அருகே ராமையன்பட்டி குப்பைக்கிடங்கு நேற்று மாலை முதல் தீப்பற்றி எரிந்ததால், சங்கரன்கோவில் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கடும் புகைமூட்டம் எழுந்தது. சுற்றுவட்டார கிராம மக்கள் மூச்சு திணறால் அவதிப்பட்டனர். நெல்லை மாநகராட்சியின் குப்பைக்கிடங்கு ராமையன்பட்டி பகுதியில் 180 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில் 32.5 ஏக்கரில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் 160 டன் குப்பைகள் அங்கு மொத்தமாக கொட்டப்படுவது வழக்கம். சமீபகாலமாக நெல்லை மாநகர பகுதிகளில் இயங்கி வரும் நுண்உர நிலையங்கள் காரணமாக 100 டன்னுக்கும் குறைவான குப்பைகளே கொட்டப்பட்டு வருகின்றன.

நெல்லை மாநகராட்சி குப்பைக்கிடங்கு ஆண்டுதோறும் காற்று காலமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பற்றி எரிவது வழக்கம். இவ்வாண்டும் நல்ல காற்று வீசி வரும் நிலையில், நேற்று திடீரென குப்பைக்கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. குப்பைகளில் மளமளவென பற்றி எரிந்த தீ, அருகில் உள்ள நெல்லை- சங்கரன்கோவில் சாலையில் கடும் புகைமூட்டத்தை ஏற்படுத்தியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் மின்விளக்குகளை ஒளிர செய்தபடியே சென்றன. தீ வேகமாக எரிந்ததால் அப்பகுதி மக்கள், பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அதிகாரி மகாலிங்க மூர்த்தி, உதவி மாவட்ட அதிகாரி சுரேஷ் ஆனந்த், போக்குவரத்து அலுவலர் டேவிட் ஆகியோர் தலைமையில் இரு தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

இருப்பினும் தீ கட்டுக்குள் அடங்காமல் சென்றதால் இரவு வரை அப்பணிகள் தொடர்ந்தன. தீ ஜூவாலைகள் மற்றும் புகை மூட்டம் காரணமாக ராமையன்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தேனீர்குளம், சிவாஜிநகர், கம்மாளன்குளம், வேப்பன்குளம், சத்திரம்புதுக்குளம், அரசு புதுக்காலனி, வேளாங்கண்ணி நகர், கண்டியப்பேரி பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் புகைமூட்டத்தால் திண்டாடினர். வேகமாக பரவிய கரும்புகை அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சலையும் ஏற்படுத்தியது.

Tags : Ramayanpatti , Ramayapatti garbage can, smoking
× RELATED லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து